மெல்பர்ன்: இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தனது கோர முகத்தைக் காட்டிவருகிறது. நாட்டில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் திண்டாடிவருகின்றனர்.
இதற்கிடையில், பல்வேறு நாட்டின் தலைவர்களும் இந்தியாவிற்கு உதவுவதாக அறிவித்துவரும் சூழலில், அண்டை நாடுகள் இந்தியாவுடனான எல்லைப் பகுதியை மூடியும், விமான போக்குவரத்தை ரத்துசெய்தும் வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவிற்கான அனைத்து நேரடி பயணிகள் விமானத்தையும் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்தியாவிலிருந்து அனைத்து நேரடி பயணிகள் விமானங்களையும் ஆஸ்திரேலியா ரத்துசெய்கிறது. இது குறித்து மே 15ஆம் தேதிக்கு முன்னர் மறு மதிப்பீடு செய்யப்படும்.
அமைச்சரவைக் குழுக் கூட்டத்தின்போது இந்தியாவிலிருந்து விமானங்களைத் தற்காலிகமாகத் தடைசெய்வதற்கான நடவடிக்கை, இந்தியாவிற்கு ஏதேனும் உதவிகளைச் செய்ய முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க முடிவுசெய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.