தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 3:42 PM IST

ETV Bharat / international

மியான்மரில் 43 நாள்களில் 138 பேர் படுகொலை: ஐநா அதிர்ச்சி அறிக்கை

நேபிடா: கடந்த 43 நாள்களில், மியான்மரில் அமைதியாகப் போராடிய 138 பேர் படுகொலைசெய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா
ஐநா

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மியான்மரில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு புரட்சி வெடித்தது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினர் அறவழியில் போராட்டம் நடத்தினர்.

அதனை ஒடுக்கும்விதமாக மக்களை ராணுவம் கொன்று குவித்தது. இந்நிலையில், கடந்த 43 நாள்களில், மியான்மரில் அமைதியாகப் போராடிய 138 பேர் படுகொலைசெய்யப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், "ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் சிக்கி 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 38 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பான்மையான உயிரிழப்பு ஹேயிங் தையர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் மியான்மர் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் வன்முறையை பொதுச்செயலாளர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மியான்மர் மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்றவும் பிராந்திய நாடுகள் உள்பட சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details