பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கு 16ஆவது ஆசியப் பொருளாதார கூட்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். மூன்றாவது நாள் நடக்கும் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இரண்டாவது நாளான இன்று பொருளாதார தொழில்துறை தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில், 'இந்திய - பசிபிக் கண்ணோட்டத்தில் இந்திய ஆசிய நாடுகள் ஒத்துழைப்பை நான் வரவேற்கிறேன். இந்தியாவின் சட்டங்கள், கொள்கைகள் ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் முக்கியப் பகுதியாகும். ஒருங்கிணைந்த, வலுவான மற்றும் பொருளாதார ரீதியாக, வளரும் ஆசிய நாடாக இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. இன்று இந்தியாவில் நிகழும் சில சாதகமான மாற்றங்களை உங்களுக்கு வழங்க ஆர்வமாக உள்ளேன்.
இதை நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். நீங்கள் இந்தியாவில் இருக்க இது சிறந்த நேரம் (அதாவது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்). இன்றைய இந்தியாவில், பல விஷயங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பல விஷயங்கள் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. வியாபாரத்தின் எளிமையும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது.
எங்கள் வனப்பரப்பும் அதிகரிக்கிறது. காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைகளின் எண்ணிக்கை முன்பை விட, தற்போது அதிகம். உற்பத்தித் திறன், செயல் திறன் அதிகரித்து வருகிறது. உட்கட்டமைப்பு உருவாக்கத்தின் வேகம் அதிகரித்து வருகிறது. உயர் தர சுகாதாரத்தைப் பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வரிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வரி விகிதங்கள் வீழ்ச்சியடைகின்றன. அதிகப்படியான வியாபாரக் கட்டுப்பாட்டு சட்டங்கள் (சிவப்பு-தட்டுப்பாடு) வீழ்ச்சியடைகிறது.