அர்மேனியா, அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்தன. இதையடுத்து, சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது. தனித்தனி நாடுகளாக பிரிந்த நிலையில், நகோர்னா-காராபாக் பிராந்தியத்தை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதனைத் தொடர்ந்து, நகோர்னா-காராபாக் தன்னாட்சிப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், எல்லை பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கிடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. நகோர்னா-காராபாக்கில் அர்மேனியா-அசர்பைஜான் நாடுகள் போரிட்டு வருகின்றன. இப்பிரச்னையில், ரஷ்யா தலையிட்டு முன்னதாக சமசரப் பேச்சுவார்த்தை நடத்தியது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ இரு நாட்டு பிரதிநிதிகளிடமும் பேசி போர் நிறுத்த ஒப்பந்ததை கடந்த 10ஆம் தேதி மேற்கொண்டார். இருப்பினும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், போர் ஒப்பந்தத்தை மீறி இரண்டாவது முறையாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன.