சீனா முழுவதும் கரோனா வைரஸ் காய்ச்சல் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக, வுஹான் நகரம் கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முற்றிலும் முடங்கியது.
சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இரண்டாவது முறையாக ஏர் இந்தியா விமானம், நேற்று சீனா சென்றது. 323 இந்தியர்கள், ஏழு மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 330 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி திரும்பியது.
அதிகாலை 3.10 மணியளவில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம், இன்று காலை 9.10 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. விமானத்தில் வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தபட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்குத் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 31ஆம் தேதி சீனா சென்ற விமானத்தில் 324 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அப்போது, அதீத காய்ச்சல் இருந்த காரணமாக ஆறு இந்தியர்களை விமானத்தில் அனுமதிக்க சீன அலுவலர்கள் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்படும் என்றும்; அவ்வாறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சீனாவிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 2ஆவது நபருக்கு கரோனா!