ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று காலை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் துப்பாக்கிகளுடன் நுழைந்து அங்கு பணியிலிருந்த காவல்துறையினரை நோக்கித் தாக்குதல் நடத்தியது.
பதிலுக்குக் காவல்துறையினரும் அக்கும்பல் மீது தாக்குதல் நடத்த மருத்துவமனை போர்க்களமானது. தொடர்ந்து நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறுகையில், "பயங்கரவாதிகளைச் சுட்டுவீழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் முயன்று வருகின்றனர்" என்றார்.
இதனிடையே, 80-க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளை அரசுப் படையினர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.