ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா-தலிபான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 100 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டின் செய்திதொடர்பாளர் ஜாவித் பைசல் தெரிவித்துள்ளார். ரமலானை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு எவ்வித தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என தலிபான் அமைப்பு கூறியதை வரவேற்றிருந்த ஆப்கான் அரசு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமைதி உடன்படிக்கையின் படி கடந்த மார்ச் 11ஆம் தேதி, 5,000 தலிபான்களை பரோலில் விடுவிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிகர் முகமது அஸ்ரஃப் கானி அறிவித்தார். தலிபானும் தங்கள் பிடியில் உள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிப்பதாக தெரிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புகளை செயல்படுத்த முடியாமல் தலிபான் அமைப்பும் அரசும் தாமதப்படுத்திவந்தன.