போர் நிறுத்தத்தை ஆப்கான் அரசு முன்வைப்பது ஏமாற்று வேலை எனவும்; அந்நாட்டு அரசுக்கு போரைத் தொடர்வதிலேயே விருப்பமுள்ளதாகவும் தலிபான் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கரோனா பாதிப்பு தீவிரமடையும் சூழலில், தலிபான்கள் போரை நிறுத்த வேண்டும் என்ற ஆப்கான் அரசின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை தலிபான் வெளியிட்டுள்ளது. அதில் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வேண்டுமென்றே புறக்கணிக்கும் ஆப்கான் அரசு, மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் விதமாக தொடர்ந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் மேற்கொண்ட அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, சிறையிலுள்ள 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது எனவும்; தற்காலிகமாக 1,500 பேரை விடுதலை செய்து, மீதி உள்ளவர்களை தகுந்த ஆய்வுக்குப் பின்னரே விடுதலை செய்வோம் என ஆப்கான் அதிபர் கனி உறுதியாகவுள்ளார்.
இது தொடர்பாக இருதரப்பும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. ஆப்கான் அரசின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தலிபான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க:'12 மணி நேரத்தில் 1 மில்லியன் ஆஸ்திரேலியப் பாதுகாப்பு செயலி தரவிறக்கம்!'