ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கனிலிருந்து அமெரிக்கா படை விலகிய பின், தாலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.
மக்களால் நிரம்பிவழியும் காபூல் விமானநிலையம்
பின், தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த நிலையில், ஆப்கனில் வசிக்கும் வெளிநாட்டவரை மீட்கும் பணியில் சர்வதேச அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன. இவர்களுடன் சேர்ந்து வெளியேற ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் காபூல் விமான நிலையத்தை முகாமிட்டுள்ளனர்.
இவர்களின் கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் அங்கு தாலிபான்கள் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இன்று காலை விமான நிலையத்தில் குழுமியிருந்த ஆப்கன் மக்களை வெளியேற்ற தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிரிட்டன் தூதரகம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு நிலவும் நிலைமை சவாலாக இருந்தாலும், பிரிட்டன் குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரிட்டன் தூதரகம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க:தேவைப்பட்டால் தாலிபானுடன் இணைந்து செயல்படுவோம் - போரிஸ் ஜான்சன்