பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் இயங்கிவரும் சுதந்திரமான மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நான்கு மாதமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 23,545 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக மனித உரிமைகள் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 20,026 பேர் போராட்டக்காரர்கள் எனவும் 3,519 பேர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் அலி அல் பய்யாதி கூறுகையில், "போராட்டம் தொடர்பாக இதுவரை 2,713 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 328 பேர் சிறையில் உள்ளனர்" என்றார்.