மியான்மரின் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசிடமிருந்து அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. மியான்மர் தலைவரும், அந்நாட்டு அரசின் ஆலோசகருமான ஆங் சான் சூகி, ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் பல இடங்களில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கும், உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டும் வருகின்றன. ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது ராணுவத்தினர் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றனர்.
முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச்.15) மேலும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (Assistance Association for Political Prisoners) என்னும் ஒரு வக்கீல் குழுவின் கூற்றுப்படி, "வன்முறை, ராணுவத்தினரின் தன்னிச்சையான செயல்பாடுகள், ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் இதுவரை குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, ராணுவ சதித்திட்டம் தொடர்பாக மொத்தம் 2,156 பேர் கைது செய்யப்பட்டும், குற்றம் சாட்டப்பட்டோ அல்லது தண்டிக்கப்பட்டுமோ உள்ளனர். மொத்தம் 1,837 பேர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.