வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்னர் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த 22 பேரை கொடூரமாக கொன்றனர். அதில் 19 வயதான இந்திய மாணவி தரிஷி ஜெய்ன் உள்பட 9 இத்தாலியர்கள், 7 ஜப்பானியர்கள் அடங்கும்.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டது. குரானிலுள்ள வசனத்தை சொல்லியவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், சொல்ல தெரியாதோர் கொல்லப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலையாளிகள் கொல்லப்பட்ட போதிலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட 8 பேரை காவலர்கள் பின்னர் கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணை, பயங்கரவாத தடுப்பு தீர்ப்பாய நீதிமன்றத்தில் நடந்து வந்தது.