சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அந்நாடு மட்டுமின்றி கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் மிக வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வந்த தனியார் சொகுசு கப்பல், கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக யோகோஹாமா துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சொகுசு கப்பலிலுள்ள பயணிகளுக்கும், கப்பல் ஊழியர்களுக்கும் 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
ஜப்பான் அரசு வழங்கியுள்ள இந்த ஐபோன்கள் அனைத்திலும் லைன் (Line) என்ற செயலி முன்னதாகவே நிறுவப்பட்டிருக்கும். இந்த செயலி மூலம் கப்பலில் உள்ளவர்கள் மருத்துவ குழுவுடன் எளிதில் தகவல்களை பரிமாறிக்கொள்வது, மருத்துவர்களை கலந்தாலோசிப்பது உள்ளிட்ட செயல்களை எளிதில் மேற்கொள்ள முடியும்.
"ஜப்பானுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஐபோன்களில் இந்த லைன் செயலியை பதிவிறக்கம் செய்யமுடியாது. இதன் காரணமாகவே கப்பலில் உள்ளவர்களுக்கு ஜப்பானில் பதிவு செயய்ப்பட்ட ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எளிதில் மருத்துவர்களை தொடர்பு கொள்ள முடியும்" என்று அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவால் ரத்தான சர்வதேச மொபைல் திருவிழா!