வங்க தேசத்தில் அகதிகள் முகாமிலிருந்து 138 ரோஹிங்யா அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேசியாவை நோக்கி படகு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தக் படகில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் இருந்ததால் எடை தாங்க முடியாமல் நேற்று வங்கக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அகதிகளை காப்பாற்றினர். ஆனால், துரதிஷ்டவசமாக விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் வங்க தேச அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்தக் படகில் சென்ற நொஜிமா பேகம் பேசுகையில், "ரஃபிக் என்பவருடன் மலேசியாவில் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்துக்கு அவர் வர முடியாத காரணத்தால் தான் என்னை மலேசியா அழைத்துச் சென்றனர். முன்னதாக நான் விமானம் மூலம் செல்வதாக இருந்தது. ஆனால், படகு மூலம் பலர் மலேசியா சென்றிருக்கிறார்கள் என்பதால் தான் இந்தப் பயணத்திற்கு ஒப்புக்கொண்டேன்" என்றார்.
ரோஹிங்யா மக்கள் மியான்மரில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இஸ்லாமிய சமூகமாகும். அந்நாட்டு ராணுவம் அவர்கள் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதலையடுத்து உயிருக்கு பயந்து 2017ஆண்டு ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதையும் படிங்க :முன்பைவிட அதிக தொகுதிகளில் வெற்றி - ஷாம் ஜாஜு