சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானும் டிக் டாக் செயலிக்கு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தடை விதித்தது. சட்டவிரோத, ஆபாச உள்ளடக்கங்களை உரிய முறையில் ஆராய்ந்து, அவற்றை விரைவாக நீக்கும் முறையை முழுமையாக பின்பற்றத் தவறியதால், பாகிஸ்தானில் இச்செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்தது.
இந்தத் தடையை தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். வரும் காலத்தில் பாகிஸ்தான் அரசு எங்களின் டிக்டாக் செயலிக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில், டிக்டாக் செயலியை அரசின் விதிமுறைகளுக்கு ஏற்றப்படி மாற்றியமைப்போம்" என உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், பைட்டேன்ஸ் நிறுவனம் அளித்த உறுதியை ஏற்று டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. அந்நாட்டில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை, 10 நாள்களிலேயே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீங்க கொஞ்சம் 'ஷட்அப்' பண்ணுங்க - அதிபர் தேர்தல் விவாதத்தில் புதிய விதி