தமிழில் விகடகவி, கற்க, காக்கா, பாப்பா, தந்த உள்ளிட்ட வார்த்தைகளை வலம் இடம் வாசித்தால் ஒரே உச்சரிப்புதான், இதற்குப் பெயர்தான் இருவழியொக்கும் சொல் (பாலிண்ட்ரோம்). இது இன்றைய தினத்துக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தும், 02-02-2020 என்ற இந்த நாளை ஆங்கிலத்தில் பாலிண்ட்ரோம் டே என அழைக்கின்றனர்.
இது 909 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் வந்துள்ளது. இன்றைய தினத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், மாதம்-தேதி-ஆண்டு அல்லது தேதி-மாதம்-ஆண்டு என எப்படி பார்த்தாலும் 02-02-2020 ஒரே மாதிரிதான் இருக்கும்.
இதற்கு முன்பு இதுபோன்ற தினம் 11-11-1111 அன்று வந்தது. 02-02-2020-க்கு பிறகு 101 ஆண்டுகள் கழித்து 12-12-2121 அன்று இதே தினம் வரும். அதன்பிறகு 03-03-3030 அன்று இதே தினம் வரும் என இங்கிலாந்தைச் சேர்ந்த சோலிஹுல் பள்ளியின் கணிதத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிண்ட்ரோம் என்பது கிரேக்க வார்த்தைகளான ‘palin', 'dromos' என்பதிலிருந்து உருவானது. பாலின் என்றால் ‘பின்னால்’, ட்ரோமோஸ் என்றால் ஓடுதல்... அதாவது பின்னோக்கி ஓடுதல் எனப் பொருள்படும். இதுதொடர்பாக பலரும் மீம்ஸ், கருத்துகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.