அமெரிக்க அதிபருக்கும், டிக் டாக் நிறுவனத்திற்கும் டிஜிட்டல் போர் ஒன்று நடைபெற்று வருகிறது. ட்ரம்பின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் டிக் டாக் செயலியின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம் செய்வதறியாமல் திகைத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் டிக்டாக் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டிக்டாக்கின் தடைக்கு பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் காரணமாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூகர்பெர்க்குக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, டிக் டாக் செயலியில் கருத்துப் பாதுகாப்பு இல்லையென்றும், அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலை அது ஏற்படுத்தும் என்றும் ஜூக்கர்பெர்க் வாதிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரின் பிற்பகுதியில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர்களுடன் நடைபெற்ற இரவு விருந்தின்போது, பேஸ்புக்கை விட சீன நிறுவனங்கள் மீது அதிக அக்கறையும், கவனமும் செலுத்தப்படுவதாக மார்க் ஜூகர்பெர்க் வாதிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல செனட்டர்களுடனான அவரது சந்திப்பிலும் இதேபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பல அரசு அலுவலகர்களும் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதால், இறுதியில் அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு மறுஆய்வைத் தொடங்கியுள்ளது. எனவே, பேஸ்புக் சிஇஓ சுட்டிக்காட்டியது டிக்டாக் தடையில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், டிக் டாக் செயலியைப் போல் இன்ஸ்டாகிராம் செயலியில் ’ரீல்ஸ்’ என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ள வசதி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.