அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றிபெறும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் உக்ரைன் நாட்டில் மேற்கொண்டுவரும் தொழில்கள் குறித்த கட்டுரைகளை நியூயார்க் போஸ்ட் வெளியிட்டிருந்தது.
இக்கட்டுரைகளையும் இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்கள் பயனாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
ஹேக்கிங் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களைப் பகிர அனுமதிக்க மாட்டோம் என்று ட்விட்டர் தெரிவித்திருந்தது. அதேபோல, அந்தக் கட்டுரையில் சில சரிபார்க்கப்படாத தகவல் உள்ளதால், அதைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பகிர்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களின் இந்தச் செயலுக்கு ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் இதர உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளிக்க ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஜேக் டோர்சி, ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் வரும் நவம்பர் 17ஆம் தேதி செனட் நீதித் துறை குழு முன் முன்னிலையாகவுள்ளனர் என்று அக்குழுவின் தலைவர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செனட் நீதித் துறை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விசாரணை நியூயார்க் போஸ்ட் கட்டுரைகளைத் தணிக்கைச் செய்தல், பகிர்வதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்தும், தேர்தல் இவ்விரு நிறுவனங்களும் கையாளுவது எப்படி என்பது குறித்தும் மதிப்பாய்வு செய்ய சிறந்த வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவித்தார்.
முதலில் தடைவிதித்தாலும், பின்னர் நியூயார்க் போஸ்ட்டின் அந்தக் குறிப்பிட்ட கட்டுரைகளைப் பகிர இவ்விரு நிறுவனங்களும் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிடன் ஆட்சிக்கு வந்தால் கச்சா எண்ணெய் காலி?