பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் தூதரும், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துணை அமைச்சருமான ராபர்ட்டோ அசிவெடோ 2013இல் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் 2017ஆம் ஆண்டும் உலக வரத்தக அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் அடுத்தாண்டில் நிறைவுபெற உள்ள நிலையில், தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராபர்டோ அசிவெடோ அறிவித்துள்ளார். தற்போது கரோனா வைரசால் உலகளவில் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்துவரும் நிலையில், இவர் இந்த முடிவை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பு உறுப்பினர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 21ஆம் தேதி, தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜெனீவாவில் உள்ள தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ”அடுத்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இச்சூழலில் அவர் விரைவில் பதவியிலிருந்து விலகுவதன் மூலம், இந்தக் கூட்டத்திற்குத் தயாராக அடுத்த தலைவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் எதிர்காலத்திற்கு இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் தலைவராக அவர் செயலாற்றிய பணி பாராட்டுகுரியது என ஐநா தலைவர் கூறியதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். முன்னதாக, உலக வர்த்தக அமைப்பு சீனாவுக்கு ஆதரவு காட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!