ஒரு உயிரியின் வாழ்க்கை வட்டத்தில் முதுமை ஒரு முக்கியப் படிநிலையாகும். இது யதார்த்தமானதும் தவிர்க்க முடியாததுமான ஒரு நிஜமாகும். 'பிறப்புண்டேல் ஆங்கோர் இறப்புண்டாம்' என்னும் மூத்தோர் சொன்னதுபோல், வாழ்வுண்டேல் ஆங்கே முதுமையும் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதுமை பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போதே, இயலாமை, புரிந்துகொள்ள முடியாமை, நோய் பிணிகள், அழுக்கு வேட்டி, ஒன்றுக்கும் உதவாமை, தொல்லை போன்ற எதிர்மறையான சிந்தனைகள் நினைவிற்கு வருவது சாதாரணம். ஆனால், முதியவர்களின் அனுபவம், அறிவு, பக்குவம், ஆசிர்வாதம் ஆகியவற்றின் பலன்கள் தாமாதமாகவே புரியவருகிறது. இது இயற்கையின் யதார்த்தம்.
நாம் வாழும் காலம் நீண்டு கொண்டே போகிறது. கடினமான சூழலிலைகூட இந்த உலகம் கடந்துவந்துள்ளது. ஆனால், மனிதன் வாழும் நாள்கள் குறைந்துகொண்டே போகிறது.
முதுமை
- 60-64 வயதில் மூத்தவர்
- 65-70 இளைய முதுமை
- 75-85 நடுத்தர முதுமை
- 85க்கு மேல் முதுமை
மேற்கூறிய வயதுகளில், பொதுவாக ஒருவரின் முதுமை வாழ்க்கை தொடங்குகிறது. அவரின் உடலின் உறுப்புகள் எல்லாமே மாற்றம் அடைகின்றன. அவற்றின் செயல்பாடும் குறைகின்றன. பழைய ரப்பர் போல் தோல் சுருங்கி, எலும்புகள் வன்மையிழந்து கோலூன்றி நிக்கும் நேரமது. 60 வயது தொடக்கத்திலேயே, குருதிக்குழாய்கள் கடினமாகின்றன.
இதனால் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து, இதய நோய்கள், முடக்குவாதங்கள் ஏற்படுகின்றன. உடல் தசைகள் தளர்ந்து இளமையில் இருந்த எடையைவிட 70 விழுக்காடு எடை குறைகிறது. குறிப்பாக எழுபது வயதுடைய ஒருவர் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு, இளைமையிலிருந்து 65 விழுக்காடு குறைவான அளவாகும். குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தி சரிவடைகிறது. இதனால் எளிதில் நோய்கள் ஆட்கொள்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
'மூப்பு வருமுன்னரே அறிவைப் பெருக்க வேண்டும்'என்கிறது நாலடியார் நூல். இந்த நேரத்தில் 60 வயதிற்கு முன்னதாகவே, ஒருவர் முதுமைக்குத் தயாராக வேண்டும். அதற்கான புரிதல், செயல்கள் வேண்டும். உடல் சம்பந்தப்பட்ட மாற்றங்களுக்கு அடிப்படை முன்வழிமுறைகள் உண்டு.
கொழுப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்க வேண்டும். முக்கியமாக அசைவக் கொழுப்பை ஒதுக்க வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறி உள்ளிட்ட தாவர உணவுகளை உண்ண வேண்டும். அதிகமாக நீர் அருந்த வேண்டும். இந்தக் காலத்தில், உடல்பயிற்சி இயன்றியமையாதது. நல்ல காற்றுள்ள வெளியில் உடல்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் உள்ளிட்ட தீங்கு தரக்கூடிய பழக்கங்களை நிறுத்திவிட வேண்டும்.