உலக நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தாண்டு ஐநாவின் 75ஆவது ஆண்டு விழா செப்டம்பர் மாதம் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், 75ஆவது உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்பது கடினம் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரரோஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநாவின் பொது சபைத் தலைவர் டிஜ்ஜனி முஹம்மது-பாண்டேவுக்கு ஆண்டனியோ குட்ரரோஸ் எழுதியுள்ள கடிதத்தில், "கோவிட்-19 காரணமாக இப்போது தனிமைப்படுத்துதல், போக்குவரத்து தடை உள்ளிட்டவை விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் வரை தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டை மாற்று வழிகளில் நடத்தலாம்.
முக்கிய தலைவர்களின் பேச்சுகளை முன்னரே பதிவு செய்து, அதை ஒளிபரப்பி உச்சி மாநாட்டை நடத்தலாம். இதன் மூலம் ஒரு நாட்டின் உச்சபட்ச தலைவர் மாநாட்டில் கலந்துகொள்வது உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 'The Future We Want, the UN We Need' என்ற தலைப்பில் ஐநா கொண்டாட திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு நடைபெற்ற ஐநா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜிங் பிங் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. முக்கிய தலைவர்கள் பலரும் இந்தாண்டு நடைபெறும் 75ஆவது ஐநா உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சீனாவின் கைப்பாவையாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு - ட்ரம்ப்