அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் ஆப்பிரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவத்தின் காணொலி இணையத்தில் பரவிவருகிறது. அதில் நகரின் நடு ரோட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கரான கால்பந்து வீரர் ஜார்ஜ் ஃப்ளாய்டை, மினியாபோலிஸ் நகரின் காவலர் ஒருவர், மூச்சுவிட முடியாத வகையில் நீண்ட நேரமாகப் பிடித்து வைத்துள்ளார்.
"என்னால் நகர முடியவில்லை. மூச்சும் விட முடியவில்லை" என்று தொடர்ந்து ஃப்ளாய்ட் கூக்குரல் எழுப்புகிறார். அருகிலிருந்த பொதுமக்களும் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு ஆதரவாகக் காவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அருகிலிருந்த காவலர்கள், "பாருங்கள் அவர் பேசுகிறார், நன்றாகத்தான் இருக்கிறார்" என்று அலட்சியமாகப் பதிலளித்தனர்.
காவலரின் கோரப்பிடியில் சிக்கிய ஃப்ளாய்ட், மூச்சு விட முடியாததால் மெல்லச் சுயநினைவை இழந்தார். இருப்பினும் அந்தக் காவலர், தனது பிடியை விலக்கவில்லை. சுமார் 10 நிமிடங்களாக, இதேபோல தனது கோரப்பிடியில் ஃப்ளாய்டை வைத்துள்ளார். அவசர உதவிக் குழு வந்து, அவரை மீட்கும் வரை, தனது பிடியைக் காவலர் விலக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, ஃப்ளாய்ட் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இதனைக் கண்டித்து அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.