ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் அதிபர் தேர்தல் வெற்றிக்கான சான்றை வழங்குவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது, தற்போதைய அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்கு நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவலர்களால் சூடப்பட்ட பெண் ஒருவர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் அட்டூழியம்; துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு - நாடாளுமன்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டபோது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற ஜன்னல்களை உடைத்து, நாட்டின் கொடியினை இறக்கி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக பெருநகர காவல்துறை தலைவர் ராபர்ட் ஜே கான்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாடாளுமன்ற கட்டடத்தில் ஏறி செனட் சபைக்குள் சென்றனர்" என்றார்.
நாடாளுமன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு மணி நேரமாக போராடி கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தி காவல்துறையினர் ட்ரம்ப் ஆதரவாளர்களை கலைத்தனர். நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஒன்றுகூடி பைடனின் வெற்றிக்கான சான்றை வழங்கினர்.