அமெரிக்க முன்னாள்அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அரசு 2010ஆம் ஆண்டு 'Affordable Care Act' என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. 'ஒபாமா கேர்' எனப் பரவலாக அறியப்படும் இந்தச் சட்டம் அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு பெற்றுத் தரவும், அவர்களின் மருத்துவச் செலவைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்தச் சட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினர் (எதிர்க்கட்சி) சட்டத்திருத்த மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்ற கீழ் சபை) ஜூன் 29ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என அச்சபையின் தலைவர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
இதனிடையே, 'ஒமாபா கேர்' சட்டத்துக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் அந்நாட்டு அரசு இன்று (ஜூன் 25ஆம் தேதி) அதன் வாதத்தை எழுத்து வடிவில் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.