கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கோவிட்-19 வைரசால் உலகளவில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவிய இதன் தாக்கம் கடந்த 10 நாட்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 6000 பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 105 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. நேற்று அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி, வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியிலும் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது.