சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று குறித்த தகவல்களை அந்நாடு முறையாக உலகிற்குத் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் சீனா சிறப்பாகச் செயல்பட்டதாகவும் இல்லையென்றால் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு பாராட்டியிருந்தது.
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாகத் தெரிவித்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், "இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பு தனது உண்மைத்தன்மையை இழந்துவிட்டது.
உலக சுகாதார அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. ஆண்டிற்கு 500 கோடி டாலர்களை அமெரிக்கா இந்த அமைப்பிற்குச் செலவிடுகிறது. அமெரிக்கா செலவழிப்பதில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே(40 மில்லியன் டாலர்) சீனா இந்த அமைப்பிற்கு வழங்குகிறது. இருப்பினும் இந்த அமைப்பு சீனாவின் ஒரு பரப்புரை கருவியாகவே செயல்படுகிறது.
கடந்த 14ஆம் தேதி இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவாது என்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை அந்நாடு சிறப்பாகக் கையாள்வதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்கள்.