கரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலக சுகாதார அமைப்பைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அந்த அமைப்பிற்கு அதிகப்படியான நிதியை வழங்குவது அமெரிக்காதான்.
ஆனால், அந்த அமைப்பு கரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப் அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துவதாக ஏப்ரல் 14ஆம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்புடனான உறவை முழுவதுமாக துண்டிப்பாக அவர் கடந்த வெள்ளிக்கிழமை (மே29) அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பானது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் மீண்டும் ஒன்றுசேர்ந்து பணியாற்ற விரும்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமெரிக்காவுடனான எங்களது வலுவான உறவு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி, உலகிற்கு பெரும் நன்மையாக இருந்துள்ளது.
உலக சுகாதாரத்திற்கு அமெரிக்க அரசு, மக்களின் பெருந்தன்மையான உதவிகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த உறவைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்குள் மற்ற நாடுகள் தலையிடுவது முறையல்ல - ஆஸ்திரேலியா