தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தொற்று ஆப்பிரிக்காவில் ஏழ்மையை அதிகரிக்கும் - ஐநா எச்சரிக்கை - ஐநா தற்போதைய செய்தி

கரோனா பாதிப்பால், ஆப்பிரிக்க நாடுகளில் பல மடங்கு ஏழ்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Antonio Guterres
Antonio Guterres

By

Published : May 21, 2020, 8:29 AM IST

சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள்கூட இந்த வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வரை கரோனா பாதிப்பு எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் 'ஆப்பிரிக்காவில் கோவிட்-19இன் தாக்கம்' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஆப்பிரிக்க நாடுகள் கோவிட்-19 நெருக்கடி நிலையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளன. இதனால் அவற்றில், 2,500க்கும் குறைவான உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

இந்த தொற்றால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கருதினோம். ஆனால் இப்போது ஆப்பிரிக்க நாடுகளின் மீது நம்பிக்கை வந்துள்ளது. இருப்பினும் பல்வேறு நாடுகளிலும் தொடக்கத்தில் இந்த வைரஸ் பரவல் குறைவாகவே இருந்தது. பின்னாள்களில்தான் கரோனா பரவல் பல மடங்கு அதிகரித்தது. எனவே, வரும் சில வாரங்கள் ஆப்பிரிக்க நாடுகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இதுதவிர, குறைந்த அளவே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால்கூட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நமக்குக் குறைவாகத் தெரியலாம். ஆப்பிரிக்க நாடுகளில், முதல் ஆண்டில் மட்டும் இந்த கரோனா தொற்றால் 83 ஆயிரம் முதல் 1,90,000 பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா ஏற்படுத்தவுள்ள சமூகபொருளாராத பாதிப்புகள் குறித்துப் பேசிய குட்டரஸ், "ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பல சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆப்பிரிக்காவில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது, உணவு, கல்வி ஆகியவற்றை உறுதி செய்தல், நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு, வருவாயை உயர்த்த சர்வதேச நடவடிக்கை தேவை" என்றார்.

மேலும், கரோனாவால் ஏற்பட்ட சமூக, பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமார் 200 பில்லியின் டாலர்கள் வரை கடன் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல நிலையில் உள்ளது. டிஜிட்டல் புரட்சியும், வர்த்தக ஒப்பந்தங்களும் ஆப்பிரிக்க நாடுகளை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்தன. இருப்பினும், தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுலா என்பது கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேபோல, இந்த கரோனா பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் நீண்ட காலம் நீடித்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.

இதுதவிர, கரோனா காலத்தில், விவசாயத் துறை எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குட்டரஸ் கோரிக்கை விடுத்தார்.

போலிச் செய்திகள் பரவுவதை ஆப்பிரிக்கா எதிர்கொண்டுள்ளது குறித்துப் பேசுகையில், "எச்ஐவி, எபோலா உள்ளிட்ட நோய்கள் பரவியபோது கற்ற படிப்பினைகளைக் கொண்டு கரோனா குறித்த போலிச் செய்திகள் பரவாமல் ஆப்பிரிக்க நாடுகள் பார்த்துக்கொள்கின்றன.

கரோனாவைக் கட்டுப்படுத்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளன. அனைத்து பிராந்தியங்களுக்குள்ளும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது, தேவையான பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல்களும், ஊரடங்கும் முறையாகப் பின்பற்றப்படுகிறது" என்றார்.

இதுதவிர, ஐநா சார்பில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு லட்சக்கணக்கான மருத்துவக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஊரடங்கால் ஆபத்தில் இருக்கும் ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள்!

ABOUT THE AUTHOR

...view details