வாஷிங்டன்:இஸ்ரேல் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசு, ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பட்டாளர்களை வேவு பார்த்ததாக கார்டியன், வாஷிங்கடன் போஸ்ட், தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் இணைந்து புலனாய்வு கட்டுரையை கடந்த ஞாயிறு (ஜூலை 18) அன்று வெளியிட்டது.
இந்தப் புலனாய்வு கட்டுரையில், இந்தியாவிலுள்ள 300 நபர்கள் வேவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதில், 40 ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்குவார்கள்.
ஒன்றிய அரசு மறுப்பு
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் திங்கள்கிழமை (ஜூலை 19) ஒன்றிய அரசு மறுத்தது. "இந்தியாவில் கண்காணிப்பதற்கென்று தனி நெறிமுறைகள் உள்ளன. நம் அரசியல் சட்டமைப்பின் படி சட்டவிரோதமாக யாரையும் வேவு பார்க்க முடியாது" என நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
ஒன்றிய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் மீனாட்சி லோகி, புனையப்பட்ட, சான்றுகள் குறைவாக உள்ள அந்த கட்டுரைகள் அவதூறு பரப்புவதாகத் குறிப்பிட்டிருந்தார்.