வாஷிங்டன்: கரோனாவால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டபோது இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவப் பொருள்களை அனுப்பியது. அதற்கு நன்றிக்கடனாக, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விடுத்த வேண்டுகோளைத்தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிகள் வந்துகொண்டே இருக்கின்றன.
அதன்படி, அமெரிக்க அரசு 10 கோடி டாலர்கள் மருத்துவ உதவிகளை அளிப்பதாக அறிவித்துள்ளது. இத்துடன் மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் ஏழு கோடி டாலர் உதவியையும், 4.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளையும் அனுப்பியுள்ளது. ஒரு குப்பியின் அமெரிக்க அரசு கொள்முதல் விலை சுமார் 29,250 ரூபாய் ஆகும்.
இதுதவிர போயிங், மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தலா 75 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. கூகுள் நிறுவனம் 1.8 கோடி டாலர்கள் அளித்துள்ளது. இதுதவிர முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் அடங்கிய சர்வதேச குழு 3 கோடி டாலருக்கு மருந்துப் பொருள்களை அனுப்புவதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் உதவிகளின் மொத்த மதிப்பு இம்மாத இறுதிக்குள் 7,500 கோடி (100 கோடி டாலர்கள்) ரூபாயை எட்டும் என்று அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் ஏஹி குறிப்பிட்டுள்ளார்.