வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில், காவல் துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் 25வது சட்டத்திருத்தத்தின் கீழ் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் ட்ரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு துணை அதிபரை மைக் பென்ஸை வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நான்சிக்கு கடிதம் எழுதியுள்ள மைக் பென்சி, 25ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "நமது அரசியலமைப்பின் கீழ், 25 சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதற்காகவோ, அபகரித்தலுக்காகவோ கிடையாது. ஒருவர் அதிபராக தனது பணியை திறமையாக செய்யமுடியாவிட்டால், அந்நபரை பதவியிலிருந்து நீக்க வழிவகை செய்யும் வகையிலேயே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.