தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2020, 3:48 PM IST

ETV Bharat / international

3 மாதங்களில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து!

நியூயார்க் : அமெரிக்காவில் வரும் பிப்ரவரி இறுதிக்குள் சுமார் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தைக் கண்காணிக்கும் ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் அமைப்பின் தலைமை ஆலோசகர் மான்செஃப் ஸ்லாவி தெரிவித்துள்ளார்.

US covid vaccination
US covid vaccination

கரோனா தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலும் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைமை ஆலோசகர் மான்செஃப் ஸ்லாவி கூறுகையில், "பிப்ரவரி இறுதிக்குள் சுமார் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று நம்புகிறோம். இதில் ஆபத்தான கட்டத்திலுள்ள உள்ள அனைவருக்கும் தடுப்பு மருந்தை வழங்க முடியும். வரும் டிசம்பர் 10 அல்லது 11ஆம் தேதி, ஏதேனும் ஒரு தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று நம்புகிறேன். அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் அது முக்கிய சாதனையாக இருக்கும். ஏனென்றால், ஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பு மருந்து ஒரு டோஸை எடுத்துக்கொண்டால் போதும். இதனால் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு ஒரே நேரத்தில் தடுப்பு மருந்தை அளிக்க முடியும்.

அதேநேரம் மாடர்னா, ஃபைஸர் உள்ளிட்ட மற்ற தடுப்பு மருந்துகளை எடுத்துகொள்ளும் மக்கள், மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

முன்னதாக, புதன்கிழமை (நவ.02) பிரிட்டன் அரசு ஃபைஸர் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருந்தது. கரோனா காரணமாக உலகில் இதுவரை 14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் அமெரிக்காவில் கரோனாவால் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: யாருக்கு? எப்போது? எப்படி? - ஃபைஸரின் கரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து தகவல்கள்

ABOUT THE AUTHOR

...view details