தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) ஆண்டு மாநாடு, காணொலி வழியில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகளின் உயர்மட்ட தூதர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, "பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே ஆகிய நாடுகளுடன் சீனாவுக்கு நீண்டகாலமாக நிலவி வரும் பிராந்திய மோதலில் அமெரிக்க அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது. தென் சீனக் கடலின் நீர்வழிப்பாதை தொடர்பாக அமெரிக்கா எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை.
இருப்பினும், இந்த பகுதியில் பெய்ஜிங் தனது ராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதை தடுக்க டிரம்ப் நிர்வாகம் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பவளப்பாறைகளின் மேல் உருபெற்ற தீவுகளில் விமான நிலையங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை நிலையங்களை சீன அரசு அமைப்பதை அமெரிக்க அரசு கண்டிக்கிறது.
சர்வதேச கடல் எல்லையில் பயணிப்பதை கூட வருங்காலத்தில் சீன அரசு தலையிட்டு தடுக்கும் என்ற அச்சம் எழுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டிணைவு மற்றும் ஒத்துழைப்பு சாசனத்தில் பொதிந்துள்ள ஜனநாயக கூறுகளை, தேசங்களின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் கொள்கைகளை சீன அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
குறிப்பாக, தென்சீனக் கடலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடலோர அரசுகளை கொடுமைப்படுத்தும் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் வணிகத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கை நம் மீதும், நமது மக்கள் மீதும் செலுத்துவதை ஏற்காதீர்கள். சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் பெய்ஜிங்கின் அட்டூழியத்திற்கு எதிராக ஆசியான் நாடுகள் செயல்பட வேண்டும். உங்களுக்கு உதவ, அமெரிக்க அரசு தயாராக இருக்கிறது" என்று கூறினார்.