இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போர் காரணமாக அமெரிக்காவில் விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் பரவியது.
இந்நிலையில், அமெரிக்க அரசு வழங்கியுள்ள ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடைவிதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 7) அமெரிக்க நாடாளுமன்றம் வலிமையான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
டிக்டாக் போல சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள் உளவு பார்ப்பது, பயனாளர்கள் தரவைத் திருடுவது, அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளடக்கங்களை தணிக்கை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்தச் செயலிக்கு தடை விதித்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளைக் கரோனா பாதிக்காது: ட்ரம்பின் சர்ச்சை பேச்சை நீக்கிய ட்விட்டர், ஃபேஸ்புக்