தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வியன்னாவில் அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத பேச்சுவார்த்தை - ரஷ்யா அமெரிக்க அணு ஆயுதம்

வியன்னா : 'நியூ ஸ்டார்ட்' அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மாற்றாகப் புதிய ஒப்பந்தம் கொண்டுவரும் நோக்கில், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா-ரஷ்யா இடையே நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

us russia hold nuke talk
us russia hold nuke talk

By

Published : Jun 24, 2020, 1:37 PM IST

Updated : Jun 25, 2020, 6:18 AM IST

தொலைதூரம் சென்று தாக்கும் வல்லமைகொண்ட அணு ஆயுதங்கள், அணு ஆயுத ஏவுகணைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அமெரிக்கா-ரஷ்யா இடையே 2010ஆம் ஆண்டு 'நியூ ஸ்டார்ட்' (Strategic Arms Reduction Treaty) என்ற அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் 2021 பிப்ரவரி 5ஆம் தேதியோடு காலாவதியாக உள்ள நிலையில், அதற்கு மாற்றாகப் புதிய ஒப்பந்தம் கொண்டுவருவது குறித்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அமெரிக்க-ரஷ்ய பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பிரதிநிதி மார்ஷல் பிலிங்ஸ்லே, "10 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கசப்பான அரசியல் நிலவரம் தற்போது இல்லை என்பதை இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக புதிய ஒப்பந்தம் எட்டப்படலாம் அல்லது 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தின் காலக்கெடு மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

ரஷ்யா, சீனா தரப்பினருடனான பேச்சுவார்த்தை எப்படிச் செல்கிறது என்பதை வைத்தே இறுதி முடிவு எடுக்கப்படும். முடிவெடுக்கும் அதிகாரம் அதிபர் கையில்தான் உள்ளது.

புதிய ஒப்பந்தம் கையெழுத்தானால் அதில் அனைத்து அணு ஆயுதங்களையும் சேர்க்க வேண்டும் என அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியுள்ளது" என்றார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் போடப்பட்ட 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம் சரியான ஒப்பந்தமில்லை என விமர்சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படுவதை ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

இதனிடையே, மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சர்ஜி ரியாப்கோவ், "ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். இந்தப் பேச்சுவார்த்தை நல்ல படியாக நடந்து முடிந்தது' என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து நாட்டோ அமைப்பின் செயலாளர் ஜெனல் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் பேசுகையில், "இதில் சீனாவும் இடம்பெற வேண்டும் என நான் கருதுகிறேன். 'நியூ ஸ்டார்ட்' அணு ஆயுத ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்றால் அதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்றார்.

வியன்னாவில் நடந்த அணு ஆயுதப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி பிலிங்ஸ்லே, ட்விட்டரில், "China is a no show" என அந்நாட்டை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதனால் கடும் சினமடைந்த சீனா அமெரிக்காவை விளாசியது.

அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போரின்போது கையெழுத்தான 'Intermediate-range Nuclear Forces' ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியானதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையே செயல்பாட்டில் உள்ள ஒரே அணு ஆயுத ஒப்பந்தம் 'நியூ ஸ்டார்ட்' என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

Last Updated : Jun 25, 2020, 6:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details