அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாங்களில் அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். இவர்கள் நேருக்கு நேர் வாதாடிய நிகழ்ச்சிகளும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவுடன் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் நிதித் திரட்டலில் ஈடுபட்டார். அதில், அவருக்கு 247.8 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வேட்பாளர் ஜோ பிடன் நடத்திய ஆன்லைன் வழியாக திரட்டிய நிதிக்கு சுமார் 383 மில்லியன் டாலர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரின் நிதி திரட்டலையும் கணக்கிட்டதில் அதிபர் டரம்ப், ஜோ பிடனைவிட 135 மில்லியன் டாலர்கள் குறைவாக சேகரித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் மக்களின் ஆதரவுக்கு ட்ரம்பை விட ஜோ பிடனுக்கே அதிகம் உள்ளதால், அவரே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர்.
முன்னதாக, 2016இல் அப்போதைய ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஹிலாரி கிளிண்டனுக்கு நிதித் திரட்டலில்போது 154 மில்லியன் டாலர்களை மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.