2015ஆம் ஆண்டு கையெழுத்தான ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது மோதல் வலுத்துவருகிறது.
இதன் காரணமாக, பாரசீக வளைகுடா நாடுகளின் கடல் எல்லைப்பகுதிகளில் அமெரிக்கா தன்னுடைய போர்க் கப்பல்கள், போர் விமானங்களைக் குவித்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இதனிடையே, 'அமெரிக்காவுடன் ஈரான் மோத நினைத்தால், அந்நாடு இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாதவ் ஜாரிஃப், "ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் அலெக்சாண்டர், கெங்கிஸ்கான் போன்ற ஆக்ரோஷமானவர்களின் போக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆக்ரோஷக்காரர்கள் வந்துசென்றனர், ஆனால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஈரான் நிலையாக நின்றுகொண்டிருக்கிறது. பொருளாதார பயங்கரவாதம், இனப்படுகொலை பேச்சுகளால் ஈரான் அழிந்துபோகாது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயன்று வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ட்ரம்ப், 'பேச்சுவார்த்தைக்குத் தயாரானால் ஈரான் அரசே அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கும்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.