உலக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு போகிறது. தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, வரும் செமஸ்டரில் அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் வழியாக நடத்த அந்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை முற்றிலுமாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளனவோ, அந்தப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று ட்ரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்க அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக எம்ஐடி, ஹார்வர்டு உள்ளிட்ட எட்டுப் பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதற்கு அமெரிக்காவிலுள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வரும் செமஸ்டருக்கான பாடங்கள் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எந்தெந்த மாணவர்கள் மார்ச் 9ஆம் தேதிக்கு முன்பதிவு செய்திருந்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.