டெக்சாஸ் (அமெரிக்கா):தென் அமெரிக்க நாடானா ஹைதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைய முயற்சிப்பது வழக்கம்.
இதனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியில் அகதிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டு, அந்நாட்டுக்குள் அகதிகள் நுழைவது பெருமளவில் குறைந்திருந்தது.
தொடர்ந்து வந்த ஜோ பைடன் ஆட்சியில் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்குள் அகதிகளாக நுழைய முனைவோரின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஹைதி நாட்டில் இருந்து ஏராளமானோர், அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தை மெக்சிகோவுடன் இணைக்கும் டெல் ரியோ பாலத்தின் அடியில் தஞ்சமடைந்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாலத்தின் அடியில் தஞ்சமடைந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஹைதி அகதிகளை அப்புறப்படுத்த தீவிரம் காட்டும் அமெரிக்கா எனினும், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் இரண்டாயிரம் பேரை சட்டவிரோத குடியேற்ற செயலாக்க அலுவலகத்துக்கு அமெரிக்க அரசு மாற்றியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறுபவர்களை விரைவில் காவலில் வைக்க இதுபோன்ற இடமாற்றங்கள் செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.
தற்போது எல்லைகளை அமெரிக்க அரசு மூடியிருந்தாலும், ஹைதி அகதிகள் டெல் ரியோ பாலத்துக்கு அருகில் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சமடைந்துள்ள அகதிகளை அப்புறப்படுத்த ஹைதி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு விமானங்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் கிடங்காக துருக்கி இருக்காது'