அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு அதிகரித்துவருகிறது. அதிலும், குறிப்பாகக் கடைசி இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வரிகளை விதித்து, இரு நாடுகளும் மறைமுகமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், ஹாங்காங் பகுதிக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா விடுத்துள்ளது. அதில், "ஹாங்காங் அல்லது சீனாவில் தங்கியிருக்கும் அல்லது அங்கு செல்லும் அமெரிக்கர்கள், அமெரிக்க தூதரக சேவைகளுக்கான அணுகல் இல்லாமல் தடுத்துவைக்கப்படலாம்.
அல்லது அமெரிக்க குடிமக்கள் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் மற்றும் சட்டப்படி எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் நீண்ட நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம்.
மேலும், ஹாங்காங் பகுதியில் சீனா ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும் தனது காவல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. சமீபத்தில் சீனா இயற்றியுள்ள சட்டம் ஹாங்காங் பகுதியை சேராதவர்களையும் உள்ளடக்கியது. எனவே, சீனாவைப் பகிரங்கமாக விமர்சிக்கும் அமெரிக்கர்களும் இதனால் பாதிக்கப்படாலம்" என்று அதில் தெரிவித்துள்ளது.