கரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையம் அமெரிக்காதான் என உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 68 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று ஆயிரத்தை தாண்டியது.
கரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்க சுகாதாரத் துறை கடும் அழுத்தத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் முகக்கவசம், வென்ட்டிலேட்டர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் லாக் டவுன் காரணமாக பொருளாதாரமும் கடும் பாதிப்பில் உள்ளது. இதையடுத்து கரோனா பாதிப்பை எதிர்கொள்ள கரோனா அவசர நிதியாக இரண்டு லட்சம் கோடி டாலர் ஒதுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு நிதியின் மூலம் அங்கு சமூகத்தின் அடித்தட்டு மக்கள், வேலையின்மையால் தவித்துவருபவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அவசர கால அடிப்படையில் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்க மருத்துவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய நிறுவனம்: நெகிழ்ந்துபோன ட்ரம்பின் மகள்