அமெரிக்காவில் குழந்தை பிறப்பு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்தாண்டு அளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் குழந்தை பிறப்பு குறித்த தகவல்களை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், "2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு என்பது ஒரு விழுக்காடு வரை குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு 37 லட்சம் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்துள்ளனர். 40 வயதுக்குள்பட்ட பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது தொடர்ந்து குறைந்துவருகிறது.
15 முதல் 19 வயதுவரை கொண்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஐந்து விழுக்காடுவரை குறைந்துள்ளது. இது 1991ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. அதேநேரம் 40-களில் இருக்கும் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப் பின் அமெரிக்காவில் குழந்தை பிறப்பு என்பது ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. இதற்கு 2014ஆம் ஆண்டு மட்டும் விதிவிலக்கு.
பொருளாதார நிலை, வேலை நிலையற்று இருப்பது, கிடைக்கும் வேலைகளுக்கும் ஊதியம் மிகக் குறைவாக வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கர்கள் குழந்தை பிறப்பை முடிந்தவரைத் தள்ளிப்போடுவதாகக் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜான் சாண்டெல்லி தெரிவித்துள்ளார்.