தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2021, 5:05 PM IST

ETV Bharat / international

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகள் குறித்து எழுப்பப்படும் தொடர் சந்தேகங்கள்...அமெரிக்காவின் விளக்கம் என்ன?

வாஷிங்டன்: ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர் சர்ச்சை நிலவிவரும் நிலையில், அமெரிக்க சுகாதார நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனிகா
ஆஸ்ட்ராஜெனிகா

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர் சர்ச்சை நிலவிவரும் நிலையில், அதன் மூன்றாம் கட்ட ஆய்வக முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி 79 விழுக்காடு பயனளிக்கிறது என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்தது.

மூன்றாம் கட்ட முடிவுகளில் பழைய தகவல்களை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சேர்த்திருக்கலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியின் நம்பகத்தன்மையில் இது மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.

இதுகுறித்து தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மூன்றாம் கட்ட முடிவுகளில் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் பழைய விவரங்களை சேர்த்திருக்கலாம்.

இதனால், தடுப்பூசி செயல்திறன் குறித்த முழுமையற்ற தகவல்கள் வெளியாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, தரவு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்துடன் இணைந்து செயல்திறன் குறித்த தகவல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம். அதுமட்டுமின்றி, துல்லியமான புதிய செயல்திறன் விவரங்களை பொதுவெளியில் உடனடியாக வெளியிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ரத்த உறைவு போன்ற பின்விளைவுகள் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details