உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. அந்த வகையில், கரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த எலி லில்லி மருந்து நிறுவனம் தயாரித்த 'பாம்லனிவிமாப்' எனும் கரோனா தடுப்பூசி பரிசோதனை மூன்றாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதனையடுத்து, அம்மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அவசரகால பயன்பாட்டிற்கு கைக்கொள்ளும் வகையில் அதற்கான அங்கீகாரத்தை (இ.யூ.ஏ.) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத லேசான-மிதமான அறிகுறிகளுடன் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு இதனை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஃப்.டி.ஏவின் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் பேட்ரிசியா கவாசோனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாம்லானிவிமாப் மருந்திற்கான எஃப்.டி.ஏவின் அவசர அங்கீகாரம் கோவிட்-19 தொற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மற்றொரு சாத்தியமான வழியை வழங்குகிறது. கரோனாவுக்கு எதிரான களப்பணியில் முன்னணியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு இது பெரிதும் உதவக்கூடும்.
லேசான மற்றும் மிதமான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய ஆபத்தான நிலையில் உள்ள முதியோர், குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும். சிகிச்சையின் பாதுகாப்பும் செயல்திறனும் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் எஃப்.டி.ஏவின் இந்த முடிவு ஒரு முக்கியமான வளர்ச்சியாகும் என்று எலி லில்லி அண்ட் நிறுவனம் கூறுகிறது. அமெரிக்க அரசு மற்றும் உள்ளூர் அலுவலர்களுடன் இணைந்து, புதிய சிகிச்சையுடன் சுகாதார வசதிகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிறுவனம் பம்லானிவிமாபினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.