அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதிலும் சிறந்த வரவேற்பு இருந்துவருகிறது. அங்கு தயாரிக்கப்படும் படங்கள் பொழுதுபோக்கு, அறிவியல், ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு கதையம்சங்களுடன் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வெளிவரும் ஒருசில படங்கள் நடப்பு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும், வன்முறை அதிகம் உள்ளதாகவும் எடுக்கப்படுவதுண்டு.
அந்த வகையில் ப்ளும்ஹவுஸ் ப்ரொடெக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் கிரெய்க் சோபல் இயக்கத்தில் தி ஹண்ட் என்ற ஹாலிவுட் த்ரில்லர் படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் இரண்டு முறை ஆஸ்கர் வென்ற நடிகை ஹிலாரி ஸ்வான்க், பெட்டி கிப்லின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதில் அமெரிக்காவில் வாழும் உயர்ந்த வகுப்பு பணக்காரர்கள் சிலர், விளையாட்டுக்காக அப்பாவி மக்களை கொல்வதைப் போன்ற காட்சிகள் இடம்பபெற்றிருந்தன. இந்த டிரெய்லர் வந்த சில நாட்களிலேயே அமெரிக்காவின் டெக்சாஸ், ஓகியோ, கலிபோர்னியா ஆகிய இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹாலிவுட்டின் இனவெறி அதிகரித்துள்ளது. தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் அவர்கள் நிஜமாகவே உயர்ந்தவர்கள் அல்ல. மேலும், அந்த படத்தின் பெயரைக் குறிப்பிடாமல், கலவரத்தை தூண்டும் குறிக்கோளுடன் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் தி ஹண்ட் திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனமான யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், முன்பு கூறியபடி செப்டம்பர் 27ஆம் தேதி படம் வெளிவராது என அறிவித்துள்ளது. முன்னதாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது தி ஹண்ட் பட விளம்பரங்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.