நியூயார்க்:தொற்றுநோய்கள் உலகளவில் நீண்ட காலத்திற்கு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பெரும் சுகாதார நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. அவை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்ட தீர்மானத்தில், வலுவான சுகாதார அமைப்புகளைக் கொண்டிருப்பதன் அவசியத்தையும், சர்வதேச அளவில் எதிர்கால தொற்றுநோய்கள் தற்போது உள்ளதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கவலை தெரிவித்தனர்.
உள்நாட்டிலும், தேசிய அளவிலும், பிராந்திய ரீதியாகவும், சர்வதேச அளவிலும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும், அவற்றைத் தடுக்க தகவல், விஞ்ஞான அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாற்றம் செய்வதை உலக நாடுகள் உறுதிசெய்யவும் சர்வதேச தொற்றுநோய் தினத்தை அனுசரிக்க ஆவனசெய்யுமாறு ஐநா உலக சுகாதார அமைப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதையடுத்து, கரோனா போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக டிசம்பர் 27ஆம் தேதியை சர்வதேச தொற்றுநோய் தினமாக அறிவிக்கும் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா? - எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்