கோவிட்-19 தொற்றின் தாக்கம் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக "லேர்னிங் பாஸ்போர்ட்" (Learning Passport) என்ற திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை முறையில் தொடங்கியுள்ளது,
சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை யுனிசெஃப் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் வழங்கவுள்ளது. கடந்த 18 மாதங்களாக இது குறித்துத் திட்டமிட்டுவருவதாகவும் இந்தாண்டு சோதனை அடிப்படையில் "லேர்னிங் பாஸ்போர்ட்" தொடங்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்திய நாதெல்லா, "கோவிட்-19 தொற்றால் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள 1.57 பில்லியன் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பயன்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொசோவோ, திமோர்-லெஸ்டே மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. "லேர்னிங் பாஸ்போர்ட்" தளத்தில் தங்கள் பாடத்திட்டங்களை முதலில் வெளியிட்ட நாடுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் கூறுகையில், "பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாலும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாலும் உலகெங்கும் உள்ள குழந்தைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், அவர்களின் அச்சத்தைப் போக்கவும் கல்வி கற்கவும் நாம் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் கூறுகையில், "கோவிட்-19 தொற்றின் பாதிப்புகளுக்கு எப்படி எல்லையில்லையோ அதேபோல நமது தீர்வுகளுக்கும் எல்லைகள் இருக்கக்கூடாது. பள்ளி மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.
இதற்காக learningpassport.unicef.org என்ற தளத்தை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது
இதையும் படிங்க: ரூ.76 ஆயிரத்தில் மோட்டோரோலா மொபைல் - சிறப்புகள் என்னென்ன?