கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. பெருந்தொற்றுநோய் பரவல் காரணமாக ஐ.நா. சபையின் நேரடியான கூடுகைகள் நடத்தாததால் புதிய வாக்களிப்பு விதிகளின் கீழ், ஒரு வரைவு தீர்மானம் அனைத்து உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
முன் மொழியப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக, காலக்கெடுவுக்குள் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, தீர்மானம் தோற்கடிக்கப்படும் எனும் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது. பொதுவாக, தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்குகளால் அல்லது ஒருமித்த கருத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த புதிய நடைமுறை கைக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் ஒருதலைப்பட்ச தடைகள் எதையும் உறுப்பு நாடுகள் பயன்படுத்தப்படக்கூடாது. அனைத்து உறுப்பு நாடுகளும் வர்த்தகப் போர்களையும் பாதுகாப்புவாத நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஏப்ரல் 2ஆம் தேதி ரஷ்யா முன்மொழிந்தது.
இந்த தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவம், ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் குறித்த குறிப்பை கைவிட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டது. அதேசமயம், இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்த திட்டம் எதுவும் இல்லை என்றும் பிரச்னை குறித்து ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.