கரோனா பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சை கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதிபர் ட்ரம்ப் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அங்குள்ள தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுனவனத்திற்கு அவர் பேட்டியளிக்கையில், கரோனா குழந்தைகளை அதிகமாகப் பாதிக்காது எனவும், அதன் தாக்குதலை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு திறன் குழந்தைகளுக்கு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
கரோனா தொடர்பாக அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பக் கூடாது என சர்வதேச சமூகம் தெளிவான வழிகாட்டுதலை ஏற்படுத்தி, அதை தீவிரமாகப் பின்பற்றிவருகிறது. தவறான தகவல்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டால் அது உடனடியாக நீக்கப்படுகின்றன.
எனவே, கரோனா தொடர்பாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்குப் புறம்பாக உள்ளது எனக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் அவர் பேசிய காணொலியை நீக்கியுள்ளன. அமெரிக்க அரசின் புள்ளிவிவரத்தின்படி அந்நாட்டில், சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கை பொதுதேர்தல் 2020: பகல் 2:30 மணிக்கு முதல் கட்ட முடிவு அறிவிப்பு!