அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தேவை என்பதை நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறார். இதுபோன்ற டெக் நிறுவனங்கள் பழமைவாதிகளின் (conservative) கருத்துகளை அனுமதிப்பதில்லை என்று அதிபர் ட்ரம்ப் நீண்ட நாள்களாக விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தபால் வாக்குகளால் பெரும் மோசடி நடைபெறும் என்ற ரீதியில் ட்வீட் செய்திருந்தார். அதிபரின் ட்வீட் போலிச் செய்திகளை வழங்குகிறது என்பதை குறிப்பிடும் வகையில், அதற்கு கீழ் உண்மையான செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இணைப்பையும் ட்விட்டர் இணைத்திருந்தது.
இதனால் கோபமடைந்த ட்ரம்ப், டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அதற்கேற்ற வகையில், டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவிலும் கையெழுத்திட்டார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து ட்விட்டர், "வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லான சட்டத்தில், தற்போது அரசியல் ரீதியான பிற்போக்குத்தனமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 320 அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் இணையச் சுதந்திரத்தை வரும் காலங்களில் முற்றிலும் அழித்துவிடும்" என்று தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஃபேஸ்புக் என்பது பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய ஒரு தளம். எங்கள் தளத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கூறும் கருத்துக்கு எல்லாம் டெக் நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது. இதனால் வரும் காலத்தில், அனைத்து விதமான சர்ச்சை பேச்சுகளையும் டெக் நிறுவனங்கள் தணிக்கை செய்யும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்